சென்னை: தமிழகம் வந்திருந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், திமுக சார்பாக கனிமொழி எம்பி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “நேற்று நடந்த மகளிர் உரிமை மாநாடு ஏறக்குறைய இந்தியா கூட்டணி மகளிர் மாநாடுதான். இந்தியா முழுவதும் இருந்து மகளிர் தலைவர்கள் வந்திருந்தார்கள்.
ராஜீவ் காந்தி கொடுத்த 33 சதவீத இடஒதுக்கீடுதான் பெண்களுக்கு சரியாகச் சென்றது. மோடி சொன்ன இடஒதுக்கீடு 2032இல் கிடைக்கும் என்கிறார்கள். 2032இல் இடஒதுக்கீடு கிடைப்பதற்கு இப்போது தீர்மானம் போட வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் செய்வது ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் உரிமை மாநாடு மூலம் தெரிவித்துள்ளோம்.
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையிலும் கண்டிப்பாக நடைபெறும். முதலமைச்சர், அதற்கான ஏற்பாடுகளை செய்வார். நேற்று நடந்த மகளிர் மாநாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, தமிழ்நாட்டிற்கு எப்போது வேண்டுமானலும் வருவேன் என்று பிரியங்கா காந்தி கூறினார். விரையில் அவரை அழைக்க இருக்கிறோம்.
மகளிர் உரிமை மாநாடு என்பது ஒரு வியூகம்தான். இதன் மூலம் பெண்களை ஒன்று திரட்டி உள்ளோம். சென்ற வாரம் சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இவ்வாறு ஒவ்வொன்றாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள்தான் இவை அனைத்தும்” என்றார்.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி எப்போது தேர்தல் வேட்பாளர்களை அறிவிக்கும் என்கிற கேள்விக்கு, “இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லை, அதற்குள்ளாக வேட்பாளரை அறிவிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் உள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்று ஒன்று பேசுகிறவர்கள், நாளை ஒன்று பேசுவார்கள். இதைப் பார்த்து கட்சி தலைமை எந்த முடிவுக்கும் வர மாட்டார்கள்” என கூறினார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார் என்பதற்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக எப்படி வளரும்? முளை விடுவதற்குக்கூட வாய்ப்பு கிடையாது. அவ்வாறு கூறுவது விசித்திரமாக இருக்கிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா, சத்தீஸ்கர், ம.பி சட்டமன்றத் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!