முதலமைச்சர் பழனிசாமி வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.9) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனிடையே, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே பேசிய அவர், "புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் 210 கோடிக்கு டெண்டர் விட்டு 410 கோடி பணம் கொடுத்தவர்கள் திமுகவினர். திமுக ஆட்சியில் பாக்சர் டெண்டர் நடந்தது. எங்கள் ஆட்சியில் திறந்த நிலையில் இ - டெண்டர் நடைபெறுகிறது.
நம்மை தோற்கடிக்க டிடிவி.தினகரன் போன்றவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். 18 எம்.எல்.ஏ.,க்களை நம்மிடம் இருந்து பிடிங்கிச் சென்றார். தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அது அனைத்தையும் தூள் தூள் ஆக்குவோம்" என்று சூளுரைத்தார்.
அப்போது, அரியர் தேர்வுகள் மற்றும் வருகின்ற தேர்வில் தேர்ச்சி செய்யக்கோரி பரப்புரையின் போது மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் உங்களது கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பதிலளித்தார். கல்விக் கடன் ரத்து செய்ய கோரிக்கை வைத்ததற்கு, அவை தேர்தல் அறிக்கையில் வரும் எனக் கூறினார்.
இறுதியாக தனது பரப்புரையை முடிக்கும் போது "காட்பாடியில் பிறந்து ஆன்மீகத்தில் புகழ் பெற்று பல சமூக சேவைகளில் ஈடுபட்ட திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். முருகப்பெருமான் மீது தீராத பற்றும், பக்தியும் கொண்டிருந்ததால் திருமுருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்டார்" என முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை மருத்துவப் படிப்பிற்கு நாளை முதல் ஆன்லைன் கலந்தாய்வு