சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாட்டில் நடக்கும் தவறான செயல்பாடுகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் வரும்போது எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டப்பேரவையில் எடுத்துரைப்பார்கள்.
அந்த அடிப்படையில் தான் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் விழுப்புரம் மாவட்டத்தில் இப்ராஹிம் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்ததைக் கவன ஈர்ப்பு தீர்மானமாகக் கொண்டு வந்தார். கொலை செய்யப்பட்ட இரண்டு பேரும் கஞ்சா போதையில் முதலமைச்சர் ஸ்டாலின் பனியினை போட்டு தகராறு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதனை விமர்சனம் செய்யும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வேறு விதமாக திசை திருப்புகிறார். ஆட்சியாளர்களின் கவனத்தைச் சுட்டிக்காட்டுவது தான் எதிர்க்கட்சியின் வேலை. காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் கஞ்சா ஆபரேஷன் 2.0 என்ற தனி ஆபரேஷனை தொடங்கி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த நடவடிக்கையில் 2,138 வழக்குப் பதிவு செய்யப்பட்டு 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற சந்தேகம் வருகிறது. கைது செய்யப்படாதவர்கள் சமூக விரோதிகளா அல்லது திமுகவைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியை எழுப்பினால் ஆட்சியாளர்களுக்குக் கோபம் வருகிறது.
திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் 954 கொலைகள் நடந்திருக்கிறது. இந்த கொலைகளுக்கெல்லாம் அடிப்படை காரணமாக போதை அமைந்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு மூன்று கொலைகள் விதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து யோக்கிய சிகாமணி என்று அமைச்சர் கூறுவது கண்டனத்திற்குரியது.
யோக்கிய சிகாமணியாக இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரும் இயக்கமான அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்திருக்கிறார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களைத் தான் திமுக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தைக் கூடுதலாக முட்டை வழங்கி கருணாநிதி விரிவு படுத்தினார், இப்போது எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் விரிவுபடுத்தி இருக்கிறார்.
எனவே இந்த திட்டத்திற்குச் சொந்தக்காரர் எடப்பாடி பழனிசாமி தான். முன்னாள் முதல்வரை ஒரு அமைச்சர் இப்படி அவதூறாகப் பேசுவது கண்டனத்திற்குரியது. மா. சுப்பிரமணியம் இது போன்ற கருத்துக்களைத் தொடர்ந்து விமர்சித்தால் நிச்சயம் இதற்கான விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை பணிசெய்யவிடாமல் மிரட்டிய திமுக கவுன்சிலர்!