சென்னையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி சந்தை நான்கு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த வணிகர் சங்க நிர்வாகிகள், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரி மனு அளித்தனர்.
அந்த மனுவில்,
* கோயம்பேடு வணிக வளாகம் 24 மணி நேரமும் இயல்பாக, எப்போதும்போல் இயங்கிட அனுமதி அளித்திட வேண்டும்.
* அரசுத்துறை அலுவலர்களின் அச்சுறுத்தல்கள் அதிகார அத்துமீறல்களை குறிப்பாக கடையை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்தல், கரோனா பாதித்த பணியாளர்களை காரணம் காட்டி கடைகளை அடைத்தல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
* பூட்டி சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் கடைகள் நிபந்தனைகள் இன்றி திறந்திட அனுமதிக்கவேண்டும்.
* ஏழை எளியோர் பயன்பாட்டுக்கு உரிய பொது போக்குவரத்தை உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும்.
* அனைத்து கடைகளும் இயங்கும் நேரத்தை அதிகரித்து கூட்ட நெரிசலை தவிர்த்திட அனுமதி அளிக்க வேண்டும்.
* லட்சக்கணக்கான ஏழை எளிய கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாக உள்ள திருமண மண்டபங்கள், சுற்றுலாத் துறை சார்ந்த தொழில்கள், தங்கும் விடுதிகள், பெரிய மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கோயம்பேடு சந்தை திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். வரும் புதன்கிழமை துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உடன் ஆலோசனை செய்த பின்பு, விரைவில் நல்ல முடிவு வரும். இ-பாஸ் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளோம்'' என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஏஎஸ் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் பரிசு!