மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில், அவர் மறைவிற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு உள்ளே நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி காவல் நிலையத்தினர், சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேரைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள சயான், மனோஜ் ஆகியோர் ஏற்கனவே பிணை பெற்ற நிலையில், பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உடன் சேர்ந்து முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக பேட்டியளித்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர்களின் பிணையை ரத்து செய்யவைத்து, மீண்டும் இருவரையும் காவல் துறை சிறையில் அடைத்தது.
மீண்டும் பிணை கோரி தாக்கல்செய்த மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் பிணைக் கோரி மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல் துறை தரப்பில், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு சாட்சிகளை மிரட்டியுள்ள இவர்களை பிணையில் விடுவித்தால், அரசுத் தரப்பின் மற்ற சாட்சிகளையும் மிரட்டக் கூடும் எனவும் தெரிவித்தார்.
தற்போது நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்றுவருவதாகவும், மூன்று மாதத்தில் வழக்கு விசாரித்து முடிக்கப்பட உள்ள நிலையில் இருவருக்கும் பிணை வழங்க வேண்டியதற்கான அவசியம் ஏதுமில்லை என வாதிட்டார்.
சயான், மனோஜ் தரப்பு, காவல் துறை தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியன், இருவரையும் பிணையில் விடுவிக்க மறுத்து மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க..அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் - அண்ணா பல்கலைக்கழகம்