சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, 'இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையானது இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 35 முதல் 75 விழுக்காடு வரை மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார். மேலும் சென்னை மாநகராட்சியில் வடிகால் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை துரிதப்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TNSMART செயலி மூலம் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை வாயிலாக செல்பேசிகள் மூலம் பொது மக்களுக்கு புயல், கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1,51,050 முதல் நிலை மீட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் தாக்கத்திற்கு உள்ளாகும் 16 மாவட்டங்களில், ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வர்களுக்கு தேடல், மீட்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தேசியப்பேரிடர் மீட்புப்படையின் 11 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 5 குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் பேரிடர்களை சந்திக்க முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர். மாநிலத்தில் மீட்புப் பணிகளுக்காக 90 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் தயார் நிலையில் உள்ளன.
பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்காக 1 லட்சத்து 13 ஆயிரம் நபர்களைத் தங்க வைக்கக்கூடிய 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் 4973 பள்ளிகள், சமுதாயக்கூடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட கண்டறியப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகளுக்காக, 2897 JCB இயந்திரங்களும், 2,115 ஜெனரேட்டர்களும், 483 நீர் இறைப்பான்களும், 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 5900 கட்டுமரங்களும், 48100 மோட்டார் படகுகளும் மற்றும் 5800 இயந்திர படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
மீட்புப்பணியில் ஈடுபட மத்திய அரசிடமிருந்து 1149 பேரும் தமிழ்நாடு அரசிடம் உள்ள 899 பேரும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2048 பேர் பருவ மழை மீட்புப்பணிகளில் ஈடுபடத் தயார் நிலையில் உள்ளனர். உயிர்சேதம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1070 - 1077 என்கிற இலவச அழைப்பு எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 131 இடங்கள் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன . பாதிப்பு ஏற்படும் இடங்களில் அருகில் உள்ள திருமண மண்டபங்களை முகாம்களாக மாற்றும் நல்ல உணவு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.
பருவமழை கண்காணிப்புக்காக மற்றும் பணிகளை ஒருங்கிணைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு ஐஏஎஸ் அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!