தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட பலர் குறித்து அவர் அவதூறு பரப்புவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கிஷோர் கே. சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கிஷோர் கே. சாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையயை உறுதி செய்துள்ளது.
மேலும், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யகோரி அவரது தந்தை கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் ஆலோசித்து துணைவேந்தரை தேர்வு செய்ய வேண்டும்