சென்னை: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் நிறைந்த பிரம்மாண்டமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) திறந்து வைத்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு 397.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடங்கிப் போயிருந்தன.
இதனையடுத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட அதிக சிறப்பம்சங்களுடன் நவீனமயமாக கட்டப்பட்டுள்ளது. 2019 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் தற்போது முடிக்கப்பட்டுக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பேருந்து நிலையம், திறக்கப்படாமல் இருந்தது.
இதனையடுத்து பொங்கல் திருநாளில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இதனால் சென்னை வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் நள்ளிரவில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். மேலும் திறப்பு விழா ஏற்பாடுகள் துரிதப்படுத்தி முடிக்க உத்தரவிட்டார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் நாம் தொடர்பு கொண்ட போது டிச.30-ல் நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் கிளாம்பாகம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என தெரிவித்திருந்தார்.
சிறப்பம்சங்கள்: நிலத்தின் மொத்த பரப்பளவு 90 ஏக்கர், இதில் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் 59,86 ஏக்கர், மற்ற இடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் எட்டு புறநகர் பேருந்து நடைமேடை, 11 மாநகர் பேருந்து நடைமேடை, கட்டப்பட்டுள்ளது. அதில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்தும் அளவில் கட்டப்பட்டுள்ளது.
324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம்,2729 இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநகரப் பேருந்து அலுவலகம் , எரிபொருள் நிரப்பும் இடம், காவலர் அறை மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள், 13.50 கிலோ லிட்டர் கீழ்த்தள நீர்த் தேக்கத் தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், மின் நிலையம், ஏடிஎம் இயந்திரம் மற்றும் நேரக் காப்பாளர்களுக்கு 25 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆறு உணவகங்கள், 100 கடைகள், தாய்ப்பால் ஊட்டும் அறை, அவசர சிகிச்சை மையம், மருந்தகம், பாதுகாப்பு அறை, தரைதளத்தில் 12 கழிவறைகளும், முதல் தளத்தில் 12 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கும் அறைகள், பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறைகள், உள்ளிட்டவைகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை இன்று, மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நாக்கை துருத்தினாரா விஜயகாந்த்? 2012-ம் ஆண்டு நடந்தது என்ன?