செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, அசோக்குமார் என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அசோக்குமார், மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம், அசோக்குமாருக்கு மரண தண்டனை விதித்து 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து அசோக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட துணியில் இருந்த ரத்தக் கறையும், அசோக்குமாரின் ரத்தமும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
ஆனால், துணியில் இருந்த ரத்த மாதிரி, அசோக்குமாருடையது அல்ல என மரபணு பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.அந்த அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களும், ஆதாரங்களும் அசோக்குமார் தான் குற்றவாளி என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை" எனக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கின் புலன் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த குறைபாடுகளுக்கான காரணம் குறித்து விசாரித்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: