சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் திரிஷாவிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அந்த விவகாரத்திற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது கட்டணங்களைத் தெரிவித்திருந்தார்.
அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஒருவருக்கு பதில் அளிக்கும் விதமாக குஷ்பு பதிவிட்டிருந்த பதிவில் "சேரிமொழி" என்று குறிப்பிட்டதற்கு பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் எஸ்.சி. துறை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் அதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில், உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டமானது நடைபெற்றது. இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றம் நடைபெறுகிறது. நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நவம்பர் மாதம் வரை தலித் மக்களுக்கு எதிராக 450 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 450 வழக்குகளில் ஒரு வழக்கிற்காக கூட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை. குஷ்புவின் வீட்டின் முன்பு போராடினால் இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று எண்ணி காங்கிரஸ் கட்சியினர் போராடி உள்ளார்கள்.
1986 முதல் தமிழகத்தில் வசித்து வருகிறேன். தமிழச்சியாக இங்கு வசித்து வருகிறேன், இது என் சொந்த ஊர். நான் இதுவரை யாரிடமும் ஏற்றத்தாழ்வு பார்த்து பழகவில்லை. மேலும், நான் கூறிய வார்த்தையில் தவறு எதுவும் இல்லை. நான் அதில் தெளிவாக இருக்கிறேன். தவறு செய்திருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்டு இருப்பேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று பேசியவர்கள், இன்று ஒரு பெண்ணிற்கு எதிராக எப்படி போராடி உள்ளார்கள் என்பதையும் அனைவரும் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.