சென்னை: கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பவுசியா என்ற 20 வயது மாணவி. சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், 2ம் ஆண்டு நர்சிங் படித்து வரும் இவர் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவி அவரது சொந்த ஊரான கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20), என்ற இளைஞரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் ஹோட்டல்களில் அரை எடுத்து தனிமையில் சந்தித்து வந்ததாகவும், இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவி கடந்த 3 நாட்களாக கல்லூரிக்குச் செல்லாமல், குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் காதலனுடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடிக்கடி ஏற்படும் பிரச்சனை போல, நேற்றும் இருவருக்குமிடையே பிரச்சனை உருவாகி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தில் ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமையை இழந்த காதலன் தனது காதலியை திடீரென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனால் கோபமடைந்த மாணவியும் திருப்பித் தாக்கியதாகவும், அதன்பின்னர் இருவருக்குமிடையே சண்டை அதிகமாகி ஒரு கட்டத்தில், இளைஞர் தான் அணிந்திருந்த டி-ஷர்டை எடுத்து மாணவியின் கழுத்தில் இறுக்கியதாகவும், அதனால் மாணவி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் இளைஞர் தனது செல்போனில், இறந்த நிலையில் கிடந்த மாணவியின் புகைப்படத்தை எடுத்து, வாட்ஸ்அப்- (whatsapp) ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தோழிகள், குரோம்பேட்டையில் உள்ள ஹோட்டலுக்கு நேரடியாக சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவி உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு, குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இளைஞரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில், "இருவரும் 16 வயது இருக்கும்போதே காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் மாணவி கருவுற்று, அந்த குழந்தை தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் விடப்பட்டதாகவும், மேலும் 16 வயதிலேயே மாணவியை திருமணம் செய்த காரணத்தால், கேரள மாநில போலீசார் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்த இளைஞர் தன் காதலியை அடிக்கடி ஹோட்டலில் தனிமையில் சந்தித்து வந்ததாகவும், அதேபோல் நேற்று (டிச.1) குரோம்பேட்டையில் இருவரும் தனிமையில் இருந்த போது, மாணவி இளைஞரின் செல்போனை எடுத்துப் பார்த்ததாகவும், அதில் இளைஞர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாவும், அதனால் ஆத்திரத்திமடைந்து மாணவியை கொலை செய்துவிட்டதாகவும்" இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.