சென்னை: கன்னியகுமாரி அருகே கேரள எல்லையில் விழிஞம் பகுதியில் கேரள அரசு சிறு துறைமுகம் அமைக்க உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு கேட்டு கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில் இன்று (செப்.19) தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்து கடிதம் வழங்கினார் .
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, " கேரளாவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிறு துறைமுகம் அமைக்கும் பணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறைகளை எடுத்து செல்வது தொடர்பாக கேரள அரசின் கோரிக்கையை கடிதமாக பெற்றிருக்கிறேன். இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பின்னர் முதலமைச்சர் முடிவெடுப்பார்.
மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்
சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள்தான் செயல்படவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடாக இருக்கிறது. துறைமுகங்களை சீரமைப்பது தொடர்பான ஒன்றிய அரசின் சட்ட முன்வடிவை எதிர்ப்பது குறித்து கேரளா, கர்நாடகா உள்பட ஒன்பது மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.
மாநில அரசின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளாவின் நிலைபாடும் ஒன்றாகத் தான் இருக்கிறது" என்றார்.
அகழாய்வுக்கு கேரளா முழு ஒத்துழைப்பு
கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் கூறும்போது, " கேரளாவில் அமையவுள்ள துறைமுகத்திற்கு கன்னியாகுமரியிலிருந்து பாறைகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் வழங்கியுள்ளோம்.
துறைமுகம் அமைப்பதால் தமிழ்நாட்டிலிருந்து பொருட்களை கடல் வழியாக எடுத்துச் செல்வது எளிதாக அமையும். கேரளா, உணவு பொருட்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தே இருந்து வருகிறது.
பொருநை அருங்காட்சியகத்தின் தொடர்ச்சியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அகழாய்வு நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
நீண்ட நெடிய பாரம்பரியம்
இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கேரளா அமைச்சர் அகமது, தமிழ்நாட்டைப் போல கேரளாவுக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு. தமிழ்நாட்டின் சிறப்புக்கும், கேரளாவின் சிறப்புக்கும் எந்த குறைபாடும் இல்லாத வகையில் அகழாய்வு செய்ய அனைத்து ஒத்துழைப்பும் கேரள அரசு வழங்கும். சுற்றுலாவில் கேரளா முக்கியமான இடமாக திகழ்கிறது. அதை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பண்டைய காலத்தில் தமிழ்நாட்டிற்க்கும் கேரளாவிற்குமான தொடர்புகள் நிறைய இருந்திருக்கிறது. அதை வெளிக்கொணர அகழ்வாய்வுக்கு முழு ஒத்துழைப்பையும் கேரள அரசு வழங்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விமானப் போக்குவரத்துக்கு கூடுதல் தளர்வு