சென்னை: லயோலா கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்துவதை எதிர்த்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கேரள மாநிலத்தின் உயர்கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பிந்து பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிந்து, "தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் முதலாம் ஆண்டு கல்லூரியை விட்டு வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கும்.எனவே நாங்கள் மூன்று ஆண்டுகள் கல்லூரியை முடித்த பின்பே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மேலும், தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து படிப்புகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறது. அதனால் மாநிலங்களின் கலாச்சார ரீதியிலான படிப்பு மாணவர்களுக்கு கிடைப்பது தடை செய்யப்படுகிறது. மாணவர்களின் ஆராய்ச்சி தலைப்புகள் கூட மத்திய அரசின் நேஷனல் ரிசர்ச் சென்டர் மூலம் முடிவு செய்யப்படுகிறது. இதனால் சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மனசு மிருதியை பற்றி செய்த ஆராய்ச்சிகள் மீண்டும் நம்மை வருணாசிரம காலகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.
மேலும், என்.சி.இ.ஆர்.டி அமைப்பு டார்வின் பரிணாம கொள்கை மற்றும் வேதியல் வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை புறந்தள்ளி இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. மேலும், மூன்று மொழி கொள்கையை கேரளா எதிர்க்கவில்லை, ஒரு மொழி கொள்கையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மேலும், சமூக நீதியை பின்பற்றி நாங்களும் ஒரு கல்விக் கொள்கையை வகுத்துள்ளோம். அதன்படி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என கேரளம் அரசு செயல்பட்டு வருகிறது. கேரளா அரசு உயர்கல்விக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.