சென்னை: தமிழ்நாட்டில் தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருக்கிறது. இதில் வைரஸ் பரவல் காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆகையால், தற்போது 12ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தேர்வினை மாணவர்கள் எழுத வராதது குறித்து கல்வியாளர்களைக்கொண்டு குழு அமைத்து, உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும் எனவும், இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் செயல்பட வேண்டும் எனவும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டள்ள அறிக்கையில், "இந்தாண்டு 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த்தேர்வு எழுதவில்லை என்ற தகவலை அறிந்து மிகப்பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானோம். இதில் 46 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்று அறியும்போது வேதனை மேலும் அதிகரிக்கிறது. நம் மக்களுக்கு கல்வி உரிமையும், வாய்ப்புகளும் வளரவேண்டும்; பெருகவேண்டும் என்று தொடர்ந்து பாடுபடும், போராடும் ஓர் இயக்கம் என்ற முறையில் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது.
கடந்த ஆண்டும் இந்தப் பிரச்னை உண்டு என்பது சமாதானம் ஆகாது; இவ்வாண்டு உச்சத்திற்குச்சென்று விட்டதே. கல்வி வளர்ச்சியில் நல்ல வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டிலா இந்த நிலை?. இதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்து உரிய பரிகாரம் காணப்படுவது அவசரமும், அவசியமும் ஆகும். தமிழ்த் தேர்வை மறுபடியும் எழுத வைப்பது நோய்க்கான மருந்தாகாது. தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கதவு திறந்து விடப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்த் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனை சரியான அணுகுமுறையே. ஆனால், இதற்கான அடிப்படையாக பள்ளிகளில் தமிழ்ப்பாடம் என்பது மிக முக்கியமான ஒன்றல்லவா?. இதில் காலங்கடத்தாமல், தமிழ்நாடு அரசு கல்வியாளர்களைக்கொண்டு குழு அமைத்து, உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளியைக் கண்காணித்து அவசர மருத்துவத்தை மேற்கொள்வது போல், இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
மேலும் "கரணம் தப்பினால் மரணம்" என்ற நிலை, இனி தொடராதிருக்க, வருமுன் காக்கும் முறையில் திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை, குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையை நாம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான 13-ம் தேதி மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 8 லட்சத்து ஆயிரத்து 744 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். மேலும் 49 ஆயிரத்து 599 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை.
அதேபோல் தனித்தேர்வர்களாக 8 ஆயிரத்து 901 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 786 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதில் 1,115 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. 50,674 மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தும் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாயமான சென்னை மருத்துவர்!