சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீது ஏற்கனவே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது முன்னாள் வணிகம் மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி மீதும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்து, இன்று (செப்.16) லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
28 இடங்களில் சோதனை
சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள, முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 28 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
தற்போது அவர் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் தகவல் அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், 2016 முதல் 2021ஆம் ஆண்டுவரை, வணிகம் மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தபோது கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடியே 99 லட்சம் என வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.56 கோடியே 60 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
654 விழுக்காடு அதிகமாக சொத்து சேர்ப்பு
இரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இடைபட்ட காலங்களில் கே.சி வீரமணியின் வருமானம் ரூ. 4 கோடியே 39 லட்சம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரூ. 2 கோடியே 56 லட்சம் பணமானது, 5 வருடங்களுக்கான செலவு உள்ளிட்ட கணக்குகளில் சென்றுவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக செலவு போக ரூ. 1 கோடியே 83 லட்சம் ரூபாய் அளவிலான சொத்துக்களையே சேமிப்பு வைத்திருக்க முடியும் நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 28 கோடியே 73 லட்சம் அளவில் சொத்து சேர்த்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையானது வருமானத்தைக் காட்டிலும் 654 விழுக்காடு அதிகம் என லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது தாயார், மாமனார், சகோதரர்கள், மனைவி உள்ளிட்டோர் பெயரில் சொத்துக்களை வாங்கிய கே.சி வீரமணி, பிற்பட்ட காலங்களில் அந்த சொத்துகளை தனது பெயருக்கு மாற்றம் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
ஏக்கருக்கு ஒரு ரூபாய் குத்தகை தொகை
மேலும் முன்னாள் அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து மதிப்பை குறைத்து பத்திரப் பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக ஓசூரில் உள்ள 100 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஏக்கருக்கு ஒரு ரூபாய் எனும் வீதத்தில் குத்தகைக்கு எடுத்து, அதில் ரூ. 15 கோடி மதிப்பிலான நட்சத்திர உணவு விடுதிகளை கட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பர்களும், தொழில் பங்குதாரர்களுமான ராம ஆஞ்சநேயர் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரது இடங்களிலும், லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
சோதனையின் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரி கட்டினார் விஜய் - அரசு விளக்கம்