சென்னை: சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தணை வைத்திருந்ததற்காக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்துவிட்டு, அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத் துறையினர் அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இருதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதாகவும், ஆகையால் உடனே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று (ஜூன் 15) இரவு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில் பாலாஜியைப் பார்க்க மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க மருத்துவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவேரி மருத்துவமனை முற்றிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் 7 வது மாடியில், காவல் ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய சிறப்பு படை காவல்ர்கள் 15 பேர் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டும் இன்றி மருத்துவமனையை சுற்றி 2 உதவி ஆணையர்கள், 6 காவல் ஆய்வாளர்கள், 13 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 100 கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நல அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மூத்த ஆலோசகரும், இருதய அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான குழு பரிசோதித்து ஆரம்ப கால கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் (CABG) அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், அவருக்கு அளிக்க வேண்டிய மயக்க மருந்துக்கான உடற்தகுதியை சோதனை செய்து அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்படும். மேலும், அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்கானிப்பில் சிகிச்சை பெற்று வருகிரார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் விமர்சனம் - வீடியோ மூலம் பதில் அளித்த ஈபிஎஸ்!