சென்னை : இயக்குநர் முத்தையா மண் வாசனை கொண்ட படங்களை இயக்குவதில் வல்லவர். இவரது ஒவ்வொரு படமும் உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் வகையில் இருக்கும். குட்டிப்புலி தொடங்கி விருமன் வரை, இவரது படங்கள் பெரும்பாலும் உறவுகளைத் தான் பேசி வருகின்றன. அந்த வகையில், முத்தையா இயக்கி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்.
நடிகர் ஆர்யா இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். சித்தி இத்னானி ஆர்யாவின் ஜோடியாக முத்தையா படங்களில் வரும் கிராமத்து மங்கையாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படமும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக கறிக்குழம்பு வாசம் என்ற பாடல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இப்படத்தில் ஆர்யா முரட்டுத்தனமான உடம்புடன் மீசை, தாடி வைத்து கருப்பு சட்டை வேட்டியில் கிராமத்துக் காளையாக நடித்திருந்தார். இது அவருக்கு மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக அமைந்தது. இது தவிர பிரபு, கே.பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரேணுகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் ஓடிடி வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருத்த நிலையில், ZEE 5 ஓடிடி தளத்தில் ஜூலை 7 அன்று தமிழில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடி வெளியீடு குறித்து இயக்குநர் முத்தையா தெரிவித்ததாவது, "'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' காதல், தியாகம், மீண்டெழும் திறனாற்றல் ஆகிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. தாங்கள் வழக்கமாகப் பின்பற்றிவரும் மதக் கோட்பாடுகளை பார்வையாளர்கள் மாற்றியமைக்கவேண்டிய இடையறாத தேவை இப்போது இருக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சமூக-மதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் ஒரு திரைப்படமாக இதை உருவாகியிருக்கும் அதே வேளையில் எனது பார்வையாளர்களுக்கான உணர்ச்சிகரமான அடிதடி நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் உருவாக்கவும் நாங்கள் கடும் முயற்சி எடுத்துள்ளோம்.
பெரிய திரையில் இதை ஒரு வெற்றிப்படமாக உருவாக்க உதவிய ஒரு மிகப்பெரிய திறமைவாய்ந்த நடிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் டிஜிட்டல் தளத்திலும் இந்தப் படம் ஒரு மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறும்போது, "காதர் கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியது என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அனுபவமாக அமைந்தது. மேலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அனைவரும் எங்கள் படத்தைப் காணவேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ஜெயம் ரவியின் 'ஜீனி' படம்!