ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு வசதிகள் முடக்கப்பட்டுள்ளதால் வெளியில் உள்ளவர்கள் காஷ்மீர் மக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. வெளிமாநிலங்களில் தங்கி பயிலும் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். சிலர் வெளிமாநிலங்களில் இருந்து காஷ்மீர் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க காஷ்மீர் அரசு மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவரை அனுப்பியுள்ளது.
அதன்படி நேற்று சென்னை வந்த ஜம்மு-காஷ்மீர் உயர்கல்வித் துறை தொடர்பு அதிகாரி அஸ்வாணி குமார் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், ' ஜம்முவில் தற்போது தொலைதொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்களால் தங்களது பெற்றோர், உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாணவர்களிடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில் நான் இங்கு வந்துள்ளேன். அவர்களை சந்தித்து அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை, அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று கூறி சமாதானப்படுத்தி வருகிறேன். இருப்பினும், மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் பேச முடியமால் மனமுடைந்துள்ளனர். எனவே, ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் ஒரு ஹெல்ப் லைன் நம்பரை அறிமுகப்படுத்தி அதன் முலம் பெற்றோர்களிடம் பேசுகின்றனர். அடுத்து ஐதராபாத் சென்று காஷ்மீர் மாணவர்களை சந்திக்க உள்ளதாக' தெரிவித்தார்.