சுமார் மூன்று ஏக்கர் நிலத்திற்கு மூன்றரை கோடி ரூபாய் முன்பணம் பெற்றுவிட்டு, நிலத்தை வேறொருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டதாக செல்வி மீது நெடுமாறன் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் முறையாக நடைபெறவில்லை எனவும், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்குத் தொடர்ந்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால் ஆலந்தூர் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திற்கோ இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும்வரை பூந்தமல்லி நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கக் கூடாது. மனு தொடர்பாக செல்வி, ஜோதிமணி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஒன்றும் அவசரம் இல்லை உதயநிதி... காத்திருங்கள்