ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவரை சிபிஐ அலுவலர்கள் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோதும் சரி, பின்னர் திகார் சிறையில் அடைத்தபோதும் சரி தமிழ்நாட்டில் பெரிய அளவிலான போராட்டங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபடவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் ப.சிதம்பரத்தின் கைதை அக்கட்சியின் தொண்டர்களே பெரிய அளவில் கண்டிக்காமல் இருக்கும் அதேசமயம், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு, அந்த மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தன. தீ பந்தத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த அடாவடியை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு உள்ளிட்ட பிரதான ஊடகங்கள் அனைத்துமே செய்தியாக்கின. இருவருமே காங்கிரஸின் முகங்கள் தான். நீண்ட பாரம்பரியம் உடைய தலைவர்கள் தான். டி.கே.சிவகுமாரை விட சிதம்பரத்தால் காங்கிரஸும், காங்கிரசால் சிதம்பரமும் அடைந்த பலன்கள் ஏராளம். ஆனால், யாருக்கு மக்கள் பலம் இருக்கிறது என்பதை இந்த கைது நடவடிக்கைகள் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
இந்த நிலையில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார் கைதுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் போல் தமிழ்நாட்டில் ஏதும் நடைபெறவில்லையே என்ற கேள்விக்கு, "கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அடிக்கடி ஆட்சிக்கு வருகிறது. தமிழ்நாட்டில் 50 வருடங்கள் ஆயிற்று. ஆகையால், அங்கே இருக்கின்ற பலம் இங்கே இல்லை. அதற்காக இங்கே ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், மறியலில் ஈடுபடுகிற அளவுக்கு கர்நாடகாவில் காங்கிரஸுக்கு இருக்கும் பலம் தமிழ்நாட்டில் இல்லை. அதை நானே ஒப்புக்கொள்கிறேன்" என தன் மன வேதனையைக் கொட்டினார்.
தனித்து விடப்பட்டிருக்கிறாரா சிதம்பரம் என்ற கோணத்தில் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு தளத்தில், 'ப. சிதம்பரத்தை ஒதுக்குகிறது தமிழ்நாடு காங்கிரஸ்? கலக்கத்தில் கதர் சட்டைக்காரர்கள்’ என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேட்டி அதற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.