சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகருக்குச் செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “என்னைப் பொறுத்தவரைக்கும் ரைடு, கைது இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது.
இதன் மூலமாக எந்த ஒரு ஆவணமும் கைப்பற்றி, அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது. இது முழுக்க முழுக்க தொலைக்காட்சி செய்திகளுக்கும், இதைக் கண்டு சிலர் ரசிக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே தவிர வேறொன்றும் இல்லை.
கடந்த 2014ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்திற்கு, 2023இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சருடைய அலுவலகத்தை ஆய்வு செய்து, அங்கு இருந்து ஆவணத்தைக் கைப்பற்றி கடந்த ஆட்சியில் நடந்த குற்றத்தை நிரூபிப்பதற்காக இப்போது விசாரிக்கிறேன் எனக் கூறுவது அபத்தமான விஷயம்.
அமலாக்கத்துறை என்ற ஒன்றே இருக்கக் கூடாது. அவற்றை சிபிஐ உள்ள உட்பிரிவுடன் இணைத்து விட வேண்டும். முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக, ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சியினை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ரைடே தவிர, இதில் வேறு எதுவும் இல்லை. கைது எல்லாம் நியாயமான விசாரணைக்கு தேவையே இல்லாத யுக்திகள்” எனக் கூறினார்.
இதனையடுத்து திரைப்பட நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளாரா இல்லையா என்பது குறித்த கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், “எனக்கு தெரியாது. அவர் கூறிய அறிவுரை நல்ல அறிவுரை. பணம் வாங்காமல் ஓட்டுப் போட வேண்டும். நானும் அதையே கூறுகிறேன்.
காசு, பணம், துட்டு, மணி, சம்திங் சம்திங்தான் தமிழ்நாட்டு அரசியல் உள்பட தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அது இல்லாத அரசியல் நடக்க வேண்டும் என்பதைத்தான் நானும் கூறுகிறேன். அதைத்தான் விஜய் கூறி இருக்கிறார் என்றால், என் கருத்துடன் அவர் ஒத்துப்போகிறார் என்றுதான் அர்த்தம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட நடிகர் விஜய், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய விஜய், அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அது மட்டுமல்லாமல், பணம் வாங்கிவிட்டு வாக்கு அளிப்பது என்பது, நம்முடைய கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றதுதான் எனக் கூறினார்.
மேலும் பேசிய விஜய், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடம் இனி பணம் பெற்றுக் கொண்டு வாக்கு அளிக்கக் கூடாது எனக் கூறுங்கள் எனவும் வலியுறுத்தினார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்படப் பிரபலங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய்