சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று (ஜன. 02) நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் (அகில இந்திய காங்கிரஸ்) தலைமை ஒப்புதலுடன் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாநிலத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயலாளர், நிர்வாகக்குழு, மாவட்டத் தலைவர்கள், மாவட்டத் தேர்தல் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் பரப்புரைக் குழு, பரப்புரைக் குழுத் தலைவர், விளம்பரக் குழு, தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் நிர்வாகக் குழு போன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "இவ்வளவு பெரிய குழுவால் எந்தப் பயனுமில்லை. 32 துணைத் தலைவர்கள், 57 பொதுச்செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில், மூத்தத் தலைவர் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரின் மகன்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரசின் பொருளாளராக ரூபி மனோகரன் நியமனம்செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரசின் துணைத் தலைவர்களாக கோபண்ணா உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தங்கபாலு மகன் கார்த்தி, திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்த குமார் மகன் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு தேர்தலுக்காக காங்கிரஸ் குழுவின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியில் ஒருங்கிணைப்புக் குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர். ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.