தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதிதாகத் தொடங்கிய ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்
ஆகஸ்ட் 31, 1981-இல், கர்நாடகாவில் சிக்கபள்ளபுரத்தின் கவுரிபிதனூரில் பிறந்த இவர், 2009ம் ஆண்டு நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். கடந்த 2018இல், திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராகப் பதவியேற்றார். இவர் அங்குள்ள அங்கன்வாடியில் தனது மகளைச் சேர்த்து, அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை விதைத்தவர்.
கடந்த 2013ஆம் ஆண்டு, ஷில்பா பிரபாகருக்கு, பிளாஸ்டிக் தடைக்காகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து விருது கிடைத்தது. இவரின் துடிப்பான செயலைப் பாராட்டிய முதலமைச்சர், அவரை சிறப்பு அலுவலராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.