விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்தார். சீமானின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், சீமானை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, வன்முறையைத் தூண்டும் வகையிலும், தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சின்ன மலையிலுள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கராத்தே தியாகராஜன், வெங்காயம் வெடி வாங்கக் கூட தகுதி இல்லாத சீமான் பேசிய பேச்சால் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கொதித்துப் போயுள்ளனர். சீமானால் தமிழ்நாட்டில் எங்குமே நடமாட முடியாது என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''சீமான் விவகாரத்தில் எதிர்வினையாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தோல்வி அடைந்துவிட்டது. சீமானை கண்டித்து விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.
மேலும், சீமான் கருத்திற்கு இதுவரை திமுக வாய் திறக்காததது ஏன் என்றும் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.