சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கைது நடவடிக்கையை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கண்டன கூட்டம் மைலாப்பூர் சாந்தோம் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக மகளிர் அணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஷ், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய கனிமொழி, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர் குரல்கள் வைத்து வருகின்றோம். ஆனால் பாஜகவிற்கு இருக்கும் பெரும்பான்மை அவர்களுக்கு சாதகமாக உள்ளது. நம்மை தெருவுக்கு கொண்டு வந்து தொடர்ந்து போராட வைக்கக் கூடிய ஆட்சிதான் இங்கு நடைபெற்று வருகிறது. விவசாயிகள், இஸ்லாமியர்கள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கை என தொடர்ந்து தவறான திட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம்.
இந்த நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட வேண்டும் என்று நோக்கோடு இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசாங்கம் சிறுபான்மையினரை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. மத்திய அரசை எதிர்க்கும் ஒரே குரல் திமுக, அதான் 2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு வந்துள்ளது. அது பற்றி கவலை இல்லை.
கடந்த கால அடிமை வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் கனவு. இது எங்கள் நாடு இல்லை. இது நாங்கள் கனவு கானும் நாடு இல்லை. இந்த இந்திய நாட்டை நமது பிள்ளைகளுக்கு விட்டு செல்லக் கூடாது. இந்த ஆட்சிக்கு எதிராக தெருவில் இறங்கி போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிர் போகும் நிலை வந்தாலும் போராட வேண்டும், போராடி நாட்டை மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க..ஸ்டான் சுவாமியைக் கைது செய்து மத்திய அரசு என்ன சொல்ல விழைகிறது? ஹேமந்த் சோரன் கேள்வி