இலங்கை கடற்படையினர் கடந்த சில ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்தனர். பின்னர் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு மீனவர்கள் பலரை விடுவித்தது. மேலும், இந்திய அரசின் நடவடிக்கையின் காரணமாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாமலே இருந்தன. இதனால், பராமரிப்பின்றி கிடக்கும் பல்வேறு படகுகளை என்ன செய்வது என்பது தொடர்பான வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபற்று வந்தன.
இந்நிலையில், பராமரிப்பின்றி கிடக்கும் சுமார் 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, "இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி படகுகள், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமாகும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை அரசிடமிருந்து, தமிழர்களின் படகுகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதோடு, தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் அழிக்கப்படாமல், அவை மீனவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படவேண்டும் என்பதே, தமிழக மீனவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
இதையும் படிங்க: நான்கு மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை