கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அதனை தடை செய்யக்கோரியும் பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். பின்னர் கந்தசஷ்டி காணொலியை, பேசி வெளியிட்ட சுரேந்திரனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் புதுச்சேரியில் சரணடைந்தார்.
பின்னர், சென்னை தியாகராயநகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தை சோதனை செய்த போது கணினி உள்ளிட்ட ஆவணங்களை ஊழியர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுமட்டுமில்லாமல் சோதனையில் கந்தசஷ்டி கவசத்தின் காணொலி தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் சைபர் கிரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கந்தசஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் சேனல் வெளியிட்ட வீடியோவையும் யூடியூபிலிருந்து சைபர் கிரைம் காவல்துறையினர் அழித்துள்ளனர். பின்னர் கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை யூடியூப் நிர்வாகத்திற்கு அனுப்பி கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக் கோரி மத்திய குற்றபிரிவு கவலுறையினருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் மறைமலை நகரை சேர்ந்த குகன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.