கமல் ஹாசனின் 66ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சி தொண்டர்கள் நற்பணிகளை செய்ய முன் வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சி பணிகள், என் தொழில் சார்ந்த பணிகள் இவற்றோடு தமிழ் நாட்டைச் சீரமைக்கும் நல்ல காரியத்திலும் நான் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்களுக்கு தெரியும். நான் துணிந்த பின் தயங்குவதில்லை. தடைகள் கண்டு மயங்குவதில்லை. எதிர்ப்பு கண்டு கலங்குவதில்லை.
நவம்பர் 7 என் பிறந்த நாள் மட்டுமல்ல. என்னுள் நேர்மையையும் துணிச்சலையும் ஊட்டி வளர்த்த என் தந்தையின் நினைவு நாளும் கூட. ஊரே என்னை கொண்டாடிக் கொண்டிருக்க நானோ உள்ளூர தந்தையின் நினைவுகளில் ஆழ்ந்திருப்பேன்.
இப்போது இருக்கும் கரோனா சூழல் கொண்டாட்டத்திற்கு உரியத அல்ல. நமக்கும் பல வேலைகள் காத்திருக்கின்றன. 'நற்பணி' எனும் சொல்லையே நாற்பதாண்டுகளுக்கு முன் இந்திய சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தவன் நான். என்னுடைய பிறந்த நாளை 'நற்பணி தினமாக' அறிவித்து அன்றும் மக்களுக்காக நற்காரியங்களை செய்யுங்கள்" என்றார்.