கோயம்புத்தூர் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 17) காலை பெரியார் சிலை மீது காவி நிற சாயம் பூசப்பட்டிருந்தது. இதனைக் கண்ட திராவிட கழகத்தினர், மற்றும் பல்வேறு கட்சியினர் பெரியார் சிலை முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிலையில் இருந்த காவி நிற சாயத்தை நீக்கி சுத்தப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இதனிடையே, நேற்று மாலை பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்ற இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இச்செயலைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னதாக பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக ராகுல் காந்தி தமிழில் ட்விட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக