குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”தேச விரோத சக்திகளின் தொடக்கம் இது. இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலையை தடுக்காமல் அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. வாக்கு வங்கிக்காக சட்ட பிழைகள் செய்யும் அரசு, மக்களுக்கு எதிராக தொடுக்கும் போர் வியூகம் இது. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்று எதிர்கால சமூகத்தை பயப்பட வைக்கும் அடியாக இது உள்ளது.
பெட்ரோல் விலைக்காக கொதித்தவர் இன்று ஆளும்போது பெட்ரோல் விலை 78 ரூபாய். கரம் கோர்த்து தலை மூழ்குவோம் இவர்களை, பாகிஸ்தான் இந்துவிற்கு வழங்கப்படும் உரிமை இலங்கை தமிழர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை. அதிமுக ஆதரவு தெரிவித்தது வியாபார கட்டாயம், அதை அரசியலில் கொண்டு வரக்கூடாது.
வரலாற்றின் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. மக்களுக்கு எதிராக செல்லும் தனி நாயகத்தை உருவாக்குவதை எதிர்க்கும் வரை நான் ஓயமாட்டேன்.
பாம்புகளை கண்டு பயப்படும் படை அல்ல இளைஞர்கள் கூட்டம். வேலை வாய்ப்பு இல்லவே இல்லை. எதை சாதிக்க இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை. அதிமுக அரசு தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் இது.
கேள்வி கேட்பவனை ஒடுக்கும் வேலைதான் அரசின் பயங்கரவாதம். சரியான பாதையில் சரியான நேரத்தில் எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம். சட்ட ரீதியாக இதை சந்திப்போம்.
ரஜினி இதுகுறித்து பேசவில்லை, பேசுவார் என்று நம்புகிறேன். பிரதமரை சந்திக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டேன். ஆனால் அவர் இன்னும் அதற்கான நேரம் ஒதுக்கவில்லை.
விருந்தோம்பல் தமிழனுக்கு சொல்லி கொடுக்க தேவையில்லை. திமுக-வின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் நிச்சயம் கலந்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.