விஞ்ஞானியும், குடியரசு முன்னாள் தலைவருமான மறைந்த ஏபிஜே அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 27ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதனால் ரெயின்ட்ராப்ஸ் ஏபிஜே அப்துல் கலாம் என்னும் சர்வதேச அமைப்பும், அப்துல் கலாமின் குடும்பத்தாரும் சேர்ந்து அந்நாளில் மாலை 7 மணிக்கு "கலாம் சலாம்" எனும் ஆன்லைன் மெய்நிகர் (virtual tribute) அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த நிகழ்வைச் சமூக வலைதளப் பக்கங்கள், யூடியூப் சேனல், டோக்கியோ தமிழ் டிவி, விஜிபி உலக தமிழ்ச் சங்க சமூக வலைதளப்பக்கங்கள் உள்ளிட்டவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதில் சிறப்பு அழைப்பாராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஆன்லைனில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவார். அதன்பின் அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்வார்.
இதுகுறித்து ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனர் அரவிந்த் ஜெயபால், "நடிகர் கமல்ஹாசன் உள்பட உலகெங்கும் உள்ள பல்வேறு சாதனையாளர்கள் 'கலாம் சலாம்' நிகழவில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
அப்துல் கலாம் நமது வாழ்வின் அங்கமாக இருந்திருக்கிறார் என்பதைச் சாதனையாளர்கள் பலரும் உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னுடன் இணைந்து அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் ஷேக் தாவூத், ஷேக் சலீம் ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் இல்லத்திலிருந்து இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கவுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: 'இயற்கைச் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே; காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'