சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வம். வெற்றிகரமாக நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்தது. இதற்காகப் பாடுபட்ட சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல் பேப்பர் ராக்கெட்டை தூரிகையாக்கி வீரமுத்துவேல் படத்தை ஓவியமாக வரைந்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேலுவின் மகன் தான் வீரமுத்துவேல். இவருக்கு விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயதிலிருந்தே இருந்தது. உயர்கல்வி முடித்துவிட்டு தாம்பரத்தில் தனியார் கல்லூரியிலும், சென்னை ஐஐடியிலும் தொழிற்கல்வி பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என அடுத்தடுத்து தேடித்தேடிப் படித்தார் வீர முத்துவேல்.
சென்னை ஐஐடியின் ஏரே-ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீரமுத்துவேலுக்கு 1989ஆம் ஆண்டில் இஸ்ரோ விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, பெங்களூரில் உள்ள யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது அந்த தொழில்நுட்பம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது.
ஏனெனில், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும், ரோவரை இயக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிக்கரமாக இருக்கும், பாராட்டுகளைப் பெற்ற வீரமுத்துவேலின் சோதனை முயற்சி அவரை சந்திரயான்-3 திட்ட இயக்குநராகவும் மாற்றியது.
சந்திரயான் -3 திட்டத்திலும் இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் வீரமுத்துவேல்.
இந்நிலையில், வீரமுத்துவேலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகப் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம், பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல் பேப்பரில் ராக்கெட் செய்து நீர்வண்ணத்தில் பேப்பர் ராக்கெட்டை தொட்டு, வீரமுத்துவேல் உருவத்தை பத்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்துள்ளார்.
இதனை வீடியோவாக எடுத்து, சந்திரயான் -3 நிலவில் தடம் பிடித்ததற்காகவும், இதற்கு உறுதுணையாக இருந்த வீரமுத்துவேலுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி, அதன் ரோவரையும் தரையிறக்கிய நிலையில், அதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு தொடர் பாராட்டு மழை பொழிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சந்திராயன் 3 திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Mann ki Baat : சந்திரயான்-3 திட்டத்தில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி!