தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து அதிமுக சார்பாக முக்கியக் கோயில்களில் யாகம் நடத்திவரும் நிலையில், திமுக சார்பாக தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக வடசென்னை பகுதியில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கலாநிதி வீராசாமி பேசுகையில், 'தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் குறித்து ஆளும் அதிமுக அரசு தெரிந்துகொள்ளவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உணவகங்களும், ஐ.டி. நிறுவனங்களும் விடுமுறை அளித்துவரும் நிலையில், அதிமுக அமைச்சர்கள் தன்ணீர் பஞ்சம் இல்லை எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது.
அதேபோல் முக்கியக் கோயில்களில் அதிமுக மாவட்ட செயலாளர்களை யாகம் நடத்தும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். யாகம் செய்து தண்ணீர் சிக்கலை போக்கிடலாம் என்றால் பூசாரியையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருக்கலாமே' எனத் தெரிவித்தார்.