சென்னை: நகர்புற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒரு மண்டலத்திற்கு 3 பறக்கும் படை என்ற அடிப்படையில் 45 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பறக்கும் படை வாகனங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கிவைத்தார். பறக்கும் படை வாகனத்தில் ஒரு செயற்பொறியாளர், ஒரு காவலர், ஒரு ஒளிப்பதிவாளர் அடங்கிய குழு சுழற்சி முறையில் செயல்படும்.
உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வர்.
மேலும் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொள்வார்கள். பறக்கும் படை வாகனத்தை தொடங்கிவைத்த பின்னர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனைக் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, "உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வேட்புமனுக்கள் எவ்வாறு பெறப்பட வேண்டும். சின்னங்கள் ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படையினர் என்ற அடிப்படையில் 45 பறக்கும் படை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபடுவர்.
அனைத்து மண்டல அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் ஞாயிற்றுக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.