காரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதையடுத்து கரோனா பாதுகாப்பு குறித்து இந்தியா முழுவதும் உள்ள சித்த மருத்துவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்து சித்த மருத்துவர்கள் கரோனா தொற்றை தடுக்கும் ஆற்றல் கபசுர குடிநீருக்கு உள்ளதாக பரிந்துரைத்தனர்.
இது குறித்து தகவல் வெளியானதையடுத்து கபசுர பொடி வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கபசுர பொடியில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.
இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளும் சளி, இருமல், சிரமமின்றி மூச்சுவிடுதல் சீராக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் காரோனா வைரஸ் உடலை ஆட்கொள்ள முடியாமல் செய்யலாம். காயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுர குடிநீர் உருவாக்கப்படுவதால் இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்பது சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கபசுர குடிநீர் தான் கரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் எனக் சித்த மருத்துவர்களை கூறுகின்றனர்.
இதனையடுத்து கபசுர குடிநீர் மீது பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளதால் இன்று சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் கபசுர குடிநீர் பொடி வாங்குவதற்கு மக்கள் பலமணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
101 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த குடிநீர் பொடி ஒரு நபருக்கு ஒன்று மட்டும் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் அனைத்து வகையான வைரஸில் இருந்தும் மக்களை காக்கும் ஆற்றல் கொண்டது என்றும் இதை தடை இன்றி குறைந்த விலைக்கு விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சித்த மருத்துவர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.