சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் அருள்மிகு சுபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரிகளில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பணிநியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்டனர்.
10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
2021-22ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக சென்னை மாவட்டத்தில் கொளத்தூர், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி ஆகிய பாடப்பிரிவுகளைக் கொண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட 6.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
ஏனைய நான்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னை, கொளத்தூர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
விண்ணப்பங்கள் விநியோகம்
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்கிட உத்தேசிக்கப்பட்டதன் அடிப்படையில் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக, நடப்புக் கல்வியாண்டிலேயே அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உதவிப் பேராசிரியர்கள் தேர்வு
பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வுக்கு வல்லுநர்குழு அமைக்கப்பட்டு, 18.10.2021 அன்று நேர்காணல் நடத்தப்பட்டது. தகுதி, அனுபவம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் 9 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பணிநியமன ஆணைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும் ஒரு நூலகர் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மைச்செயலாளர் பி.சந்திர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் டிரைவர் மரணத்தில் சந்தேகம்; ஸ்ரீஅபிநவ் மீண்டும் விசாரணை