இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இன்று (மே.25) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கரோனா கொடுந்தொற்று அதன் இரண்டாம் அலை வீச்சினை முழு மூச்சாகக் காட்டி மக்களின் உயிர் பறிக்கும் அவலம் தொடருவது ஒருபுறம். மற்றொருபுறம் கரோனா தொற்றின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படும் கரும்பூஞ்சை நோயும் பலருக்கு வந்து மக்கள் அவதியும், பீதியும் கொள்வது மேலும் துன்பத்தை அதிகரிக்கவே செய்யும் அவலமாகும்.
அவரவர் பணிகளை கடமை உணர்வுடனும், பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்!
தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அதிகாரப்பூர்வமாக அமருவதற்கு முன்பிருந்தே, முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்தே மு.க.ஸ்டாலின் தனது அயராத பணியை புயல் வேகத்தில் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அவரது அமைச்சரவையினரும், அலுவர்களும், களப் பணியாளர்களாக இந்தப் ‘போரில்’ ஈடுபட்டுள்ள உயிர் பற்றிக் கவலைப்படாது உழைக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும், காவல் துறையினரும் தூய்மைத் தொழிலாளத் தோழர்களும் அவரவர் பங்களிப்பை மிகுந்த கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் ஆற்றி வருகின்றனர்.
ஆனால், கரோனாவைக் கட்டுப்படுத்தித் தடுக்க முக்கிய கருவியான தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு அனுப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, இதில் அரசியல் பார்வையுடன் நடந்துகொண்டுள்ளது என்ற கருத்து பரவலாகவும், உலகளாவிய நிலையிலும், ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை சரிவர இல்லை என்றும் விமர்சிக்கும் நிலையுமே உள்ளது.
தடுப்பூசிகளை உடனுக்குடன் விநியோகம் செய்திருந்தால்...
ஒன்றிய அரசு தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் பாதிப்பிற்கு ஏற்ப முன்னுரிமை அளித்து, தடுப்பூசிகளை உடனுக்குடன் விநியோகம் செய்திருந்தால், அமெரிக்காவைப் போல் கரோனாவைத் தடுக்க, கட்டுப்படுத்த இரண்டாம் அலையின் வீச்சை எதிர்கொள்ள பெரிதும் பயன்பட்டிருக்கும்.
முதலில் தன்னிடத்திலேயே அந்த அதிகாரத்தை வைத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி, எல்லோருக்கும் இலவசமாக ஊசி போடுவதை ஒரு தீவிரமான நடவடிக்கையாக ஆக்கியிருந்தால், இந்தக் குழப்பமும் மயக்கமும் இருக்காது.
தடுப்பூசிகளை அனுப்புவதில் ஏனோ பாரபட்சம்?
மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதில் ஏனோ பாரபட்சம்? அதை பல உயர் நீதிமன்றங்களே சுட்டிக்காட்டிய நிலை (முன்பு டில்லி உயர் நீதிமன்றமும், அலகாபாத் உயர் நீதிமன்றமும், நேற்று (மே.24) சென்னை உயர் நீதிமன்றம் போன்றவை தங்கள் ‘அதிருப்தியை’ வெளிப்படையாகத் தெரிவித்து, பாரபட்ச நடவடிக்கைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளன).
தமிழ்நாடு திமுக அரசு மூன்றரை கோடி தடுப்பூசிகளை வரவழைக்க பன்னாட்டு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது; ஒன்றிய அரசிடமிருந்து கிடைத்துள்ள தடுப்பூசி 77 லட்சம். நேற்று (மே.25) வரை 70 லட்சம் ஊசிகள் போடப்பட்டுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் ஃபைசர், மார்டோனா முதலியவை ஏனோ மாநிலங்களுக்கு வழங்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறி, தயங்கும் நிலையும் உள்ளது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் இதை சுட்டிக்காட்டி, மக்களை இப்படி உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளலாமா என்றும் கேட்டிருக்கிறார்.
அவசரம் - அவசியம்!
பிரதமரும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் இந்தத் தடுப்பூசி விநியோகம் பற்றிய குழப்பத்தை நீக்கி, தெளிவான, திட்டவட்டமான அறிவிப்புகளை அறிவித்து - மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றிக் கிடைத்து, குழந்தைகள் உள்பட 18 வயதினருக்கும், மூத்தவர்கள் என்ற வயது வேறுபாடின்றி தடுப்பூசிப் பயன்களை மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தத் தடையாக உள்ள அத்துணை இடையூறுகளையும், தடங்கலையும் நீக்கிட முன்வருவது அவசரமும் அவசியமும்.
இப்பிரச்சினையில் அரசியல் பார்வை இன்றி, மனித நேயப்பார்வைதான் ஆளுமை செலுத்தவேண்டும்.
முக்கிய வேண்டுகோளாகும்!
தடுப்பூசிதான் மக்களை இந்தக் காலகட்டத்தில் இந்தப் பேரிழிவிலிருந்து காப்பாற்றக் கூடிய நம்பிக்கை ஒளியாகும். அதனை தங்கு தடையற்று மாநில அரசுகளுக்கு, குறிப்பாக தமிழ்நாடு அரசுக்கு தந்து உதவிட முன்வர வேண்டும். இதுதான் எனது முக்கிய வேண்டுகோள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கிட்ஸ்களுக்கு கிரிக்கெட் கிட்': இது உதயநிதி உலா