திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் அடிப்படை கொள்கையே இடஒதுக்கீட்டை ஒழிப்பது தான் என்றும் சாடினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படிதான் மோடி, அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் செயல்படுவதாகவும் கூறினார்.
10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக பரிசீலனை செய்கிறோம் என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்திய போதும் அதன் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி இன்று வரை அரசு வாய் திறக்கவில்லை என்று கூறினார். நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுப்பதாக கூறிய வீரமணி, பொதுமக்களை அச்சுறுத்தாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து சேலத்தில் நடக்க இருக்கும் பவள விழா மாநாடு குறித்து பேசிய அவர், இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மதிமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார்.
உடல் நலக்குறைவால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விழாவில் பங்கேற்கவில்லை எனவும் கூறினார்.