திருவாரூர் மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கொல்லிமலை என்பவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்டவரின் வாயில் மனிதக் கழிவை ஊற்றுவதா? தந்தை பெரியார் மண்ணிலா இப்படி ஒரு காட்டுமிராண்டித்தன கீழ்த்தரக் கொடுமை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேபோல், தாக்கப்பட்டவர் மீது அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும்கூட, இத்தகைய மனிதாபிமானமற்ற, கீழ்த்தர, அநாகரிக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டோர் எவராயினும், எந்த சாதியினராயினும், எவ்வளவு செல்வாக்குள்ள நபர்கள் ஆனாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கையெடுக்க தமிழ்நாடு காவல்துறையும் தயங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சாதிவெறி சம்பவங்களில் மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், இப்படி ஒரு கொடுமையா? என்று வேதனை தெரிவித்துள்ள கி. வீரமணி, சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, மத மாச்சரிய ஒழிப்பு - இவைகளை முன்னிறுத்திய தீவிரப் பிரசாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும். ஜாதி வெறி, சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Intro:Body:
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, மத மாச்சரிய ஒழிப்பு - இவைகளை முன்னிறுத்திய தீவிரப் பிரச்சாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும்; ஜாதி வெறி, சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்குடி அருகே உள்ள திருவண்டு துறை என்ற கிராமத்தில், செங்கல் சூளை வைத்துள்ள (கொல்லிமலை என்ற) தாழ்த்தப்பட்ட சமுகத்தினைச் சேர்ந்த ஒருவரை, அவர் கடந்த 28 ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் வரும்பொழுது சாலையின் குறுக்கே கட்டை போடப்பட்டு இருந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
முத்து, ராஜேஷ், ராஜ்குமார் என்ற மூன்று நபர்கள் - இவர்கள் உறவுக்காரர்கள். கீழே விழுந்த உடனே, கொல்லிமலையை மரத்தில் கட்டி வைத்து அவரது வாயில் மலத்தில் துவைக்கப்பட்ட ஒரு குச்சியை விட்டதோடு, மனிதக் கழிவையும் அவர் வாயில் ஊற்றி, மேலும் அவர்மீது சிறுநீர் கழித்து, அவரை மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொடுமைப்படுத்தியதாக அவர் கொடுத்த புகார்மீது காவல்துறையினர், இந்த குறிப்பிட்ட மூவரில் இருவரை மட்டும் கைது செய்துள்ளதாக செய்தி வருவதோடு, மற்ற குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் இன்று சில ஏடுகளில் வந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வேதனையும், துயரமும், வெட்கமும் அடைந்தோம்.
தந்தை பெரியார் மண்ணிலா இப்படி ஒரு காட்டுமிராண்டித்தன கீழ்த்தரக் கொடுமை? தாக்கப்பட்டவர்மீது அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும்கூட, இத்தகைய மனிதாபிமானற்ற, கீழ்த்தர, அநாகரிக, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டோர் எவராயினும், எந்த ஜாதியினராயினும், எவ்வளவு செல்வாக்குள்ள நபர்கள் ஆனாலும், அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கையெடுக்க தமிழகக் காவல்துறையும் தயங்கக்கூடாது.
மனித உரிமைகளுக்கு எதிரான மற்றொரு ‘‘திண்ணியம்‘’ மீண்டும் இந்த மண்ணில் நடக்கலாமா? நடப்பதை அனுமதிக்கலாமா?
இது ஜாதி மோதல்களாகவோ, கலவரங்களாகவோ உருவெடுப்பதற்கு முன்னரே, சட்டம் தனது கடமையை உடனடியாகச் செய்திட முன்வரவேண்டும்.
எதிலும் ஜாதி, எங்கும் ஜாதி உணர்வு, எவ்விஷயத்திலும் ஜாதியப் பார்வையுடன் இயங்கும் நம் நாட்டில் - சமுதாயத்தில், இரண்டு நபர்களிடையே நடைபெறும் பழிவாங்கல் சண்டைச் சச்சரவுகளுக்கு ஜாதிச் சாயம் உடனுக்குடன் ஏற்றப்பட்டு, அத்தீப்பொறி, பெரும் தீப்பிழம்புகளை உருவாக்காமல் உடனடியாக அணைக்கப்பட தமிழக அரசின் காவல்துறை தயவு, தாட்சண்யம் பாராமல், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் தயங்கக் கூடாது!
தேர்தல் முடிந்த உடன், சமுக வலைத்தளங்களில் பரவிய ஒரு ஜாதி பற்றிய அவதூறு எத்தகைய சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கியது என்பதை நாடு அறியும்.
அச்செய்கைக்கான காரணக் குற்றவாளிகளின் கயமைத்தனம் எத்தகைய விலை கொடுக்கவேண்டிய விபரீத விளைவுகளை உருவாக்கியது -பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் என்பதும் இன்னும் மக்கள் நினைவிலிருந்து நீங்காத நிலையில், இப்படி ஒரு கொடுமையா?
குற்றவாளிகளைத் தண்டனைக்குரியவர்கள் ஆக்கும் அதே நேரத்தில், இதற்கு ஜாதிச் சாயம் பூசி, ஜாதிக் கலவரங்களாக உருமாற்றும் முயற்சிகளுக்கு மறைமுகமாக எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவதா?
அனைவரும் சகோதரர்கள் - ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்!’’ என்ற குரல் கேட்ட மண்ணிலா இப்படி சில அற்பத்தன ஆபாச அருவருப்பு நிகழ்வுகள்?
பல கிராமங்களில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் படித்து மானமும், அறிவும் பெற்று சுயமரியாதை - சமத்துவம் விரும்புவதை - மனதாலும், சமுக ரீதியாகவும் இன்றும் ஏற்கத் தயங்குவோர் எவராயினும் அவர்கள் மனிதாபிமானற்றவர்களே!
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு, மத மாச்சரிய ஒழிப்பு - இவைகளை முன்னிறுத்திய தீவிரப் பிரச்சாரம் மீண்டும் ‘விசுவரூபம்‘ எடுத்தாகவேண்டும்.
ஜாதி வெறி, சமய வெறிக்கு இடமில்லை என்று காட்டவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்று தெரிவித்துள்ளார்.
Conclusion: