சென்னை: பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதால் மட்டும் வளர்ச்சி அடைந்து விட முடியாது உழைப்பாளி மக்களின் வாழ்வை உயர்த்துவதன் மூலம் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். ஆகவே, தமிழ்நாடு அரசின் அரசாணைகளை (115,152) வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை நகர தூய்மை பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிஐடியு) சார்பில் உண்ணாநிலை போராட்டம் இன்று (ஜன.10) நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் செய்ததை வரவேற்கிறோம். அதே போல தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவதையும் வரவேற்கிறோம் அதே வேலையில் உழைப்பாளி மக்கள் அடித்தட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருக்கும் போது இந்த இரண்டு அரசாணைகளால் (115, 152) உழைப்பாளி மக்கள் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த இரண்டு அரசாணைகள் பணியாளர்களை அவுட் சோர்ஸ் முறையில் பணி அமர்த்தலாம் என்று உள்ளது. அப்படி இருந்தால் 70% பணியாளர்கள் அவுட் சோர்ஸ் பணியாளர்களாக இருப்பார்கள். இது போன்ற நடவடிக்கையால், பணி இருந்தால் மட்டுமே பணியாளர்களை பணிக்கு வர சொல்வார்கள் அதுமட்டுமின்றி சர்வீஸ் கமிஷன் இருக்காது, இட ஒதுக்கீடு இருக்காது.
உழைப்பாளி மக்களை உயர்த்துவது தான் ஒரு அரசுக்கு நோக்கமாக இருக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதால் வளர்ச்சி அடைந்து விட முடியாது அதில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வை கவனிக்க வேண்டும். உழைப்பாளி வாழ்வை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வளர்ச்சி என்றால் அது வளர்ச்சி ஆகாது. உழைப்பாளி மக்களின் வாழ்வை உயர்த்துவதன் மூலம் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும். எனவே தமிழக அரசின் அரசாணைகளை திரும்ப வாபஸ் பெற வேண்டும், பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆளுநர் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஆளுநராக நீடிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் அவருக்கு இல்லை. கூட்டாட்சி ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இருபதாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம், எனவே மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமாகா வலுவான கூட்டணியில் உள்ளது - ஜி.கே. வாசன்