கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயங்கள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் மற்றும் சாகுபடி, சிறுவணிகம் செய்பவர்களுக்கு, அறநிலைய சட்டம் 34-ன் படி நியாயமான விலையை தீர்மானித்து, அவர்களுக்கே அந்த நிலங்களை சொந்தமாக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,
"தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பல லட்சக் கணக்கான மக்கள், கோயில் நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக் கணக்கான மக்களை இவ்வாறு வெளியேற்றினால் அவர்கள் எங்கே போவது என்ற கேள்வியை எழுப்பும் விதமாக இந்த நடவடிக்கை உள்ளது. ஆகையால் அவர்களை வெளியேற்றாமல், அந்த நிலத்தையே அவர்களுக்கு சொந்தமாக்க பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது என்றார்.
மேலும் அவர், "பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு சிலைகளை திருடுபவர்களை கைது செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள இந்து அறநிலையத் துறையை இல்லாமல் செய்து, அதன் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலங்களையெல்லாம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். அந்த போராட்டத்துக்கு வலு சேர்க்கின்ற வகையில் பொன். மாணிக்கவேலின் நடவடிக்கைகள் இருந்துவிட கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்" என்றும் தெரிவித்தார்.