கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதன் காரணமாக அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது வீடியோக்களை முடக்க யூ-டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டதோடு, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
![நீதிபதி கர்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-justicekarnanbail-script-7204624_14122020200418_1412f_1607956458_534.jpeg)
அதன்படி, நீதிபதி கர்ணனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். தொடர்ந்து அவரை கடந்த 2ஆம் தேதியன்று கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
கர்ணன் ஜாமீன் கோரிய மனு ஏற்கெனவே ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் முழுக் கட்டணம் வசூல் - நீதிமன்ற உத்தரவு மீறல் என வாகன ஓட்டிகள் புகார்!