சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்ட கிஷோர் கே சுவாமி, திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை தனது ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பதிவு செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே திமுக-வின் முன்னாள் முதலமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டது என மொத்தம் 7 வழக்குகளில் அரசியல் விமர்சகரான கிஷோர் கே சுவாமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததுடன், அவர் மீது கடந்த ஜூன் மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த கிஷோர் கே சுவாமி மீண்டும் டிவிட்டர் கணக்கு மூலம் அரசியல் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி மழை வெள்ளத்தின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் பேசி தனது டிவிட்டர் கணக்கு மூலம் சமூக வலைதளத்தில் கிஷோர் கே சுவாமி பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவானது முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி எழும்பூரைச் சேர்ந்த இம்ரான் என்பவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் கிஷோர் கே சுவாமி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் அவதூறு பரப்புதல், கலகத்தை தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், சம்மனுக்கு ஆஜராகாமல் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கிஷோர் கே சுவாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது முன் ஜாமின் வழங்க மறுத்து நீதிமன்றம் கிஷோர் கே சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருந்து வந்த கிஷோர் கே சுவாமியை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் க கிரிஜா ராஜன் முன் ஆஜர்படுத்தினர். அவரை டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மீண்டும் தூசிதட்டிய உயர் நீதிமன்றம்