தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், 2018 மார்ச் மாதம் நடந்த தேர்தலில் புதிய உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட பி.எஸ்.அமல்ராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, ஆர்.சி.பால்கனகராஜ், கே.பாலு, ஜி.மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், "தலைகவசம் போடமாட்டேன் எனும் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை கட்டிக்காப்பவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்த கருத்துக்கு பதிலளித்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி, "போக்குவரத்து விதிமீறலுக்காக வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற நீதிபதி கிருபாகரனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. வழக்கறிஞர்கள் சட்டப்படி, தவறான நடத்தை தொடர்பாக வழக்கறிஞர்களுக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. சாதாரண புகார்களில் சிக்கும் வழக்கறிஞர்களை எச்சரித்து, கண்டித்துக் கொள்ளலாம்" என்றார்.