கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் 50 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கவச உடை அணிந்து கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனோ நோயாளிகளுடன் நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதலமைச்சர், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் கரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை பிபிஇ கிட் அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழ்நாடு அரசு நம்பிக்கை ஊட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முதலமைச்சரை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதில், "இந்த நெருக்கடியான கரொனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பிஜேபியினரே, இதோ தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக ட்விட்டரில் இந்திய அளவில் மு க ஸ்டாலினுக்கு எதிராக #GobackStalin எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இது பாஜகவினரின் வேலை என்று கூறி பலரும் தற்போது #westandwithstalin எனும் ஜேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.