ஷாடோ லைட் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் ’தூநேரி’. இப்படத்தை சுனில் டிக்சன் இயக்கி இருக்கிறார். இவர் கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா, குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் விஷுவல் எபெக்ட் ஸ்டூடியோவில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். பல விளம்பரப் படங்களை இயக்கி இருக்கும், சுனில் டிக்சன், முதன்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலையரசன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கைலேஷ் குமார், ஆலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தூநேரி என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர். இப்படத்தில் கதையின் நாயகனாக ’சார்பட்டா பரம்பரை’ புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார். கதாநாயகனாக நிவின் கார்த்திக்கும் கதாநாயகியாக மியா ஶ்ரீயும் நடித்துள்ளனர். குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
மேலும் ஜான் விஜய்யின் கதாபாத்திரம் குழந்தைகளை பயமுறுத்தும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என இயக்குநர் சுனில் டிக்சன் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 70 நாள்கள் நடைபெற்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் வெள்ளித்திரையில் படத்தை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.