சென்னை: புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யா(வயது 40). இவர் திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஐந்து வருடங்களாக தன் கணவர் மற்றும் மகனுடன் குடியிருப்பில் வசித்து வருகிறார். திருத்தணியில் உள்ள உறவினர் மணிகண்டன் என்பவர் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து நேற்று காலை குடும்பத்துடன் திருத்தணிக்கு சென்றுள்ளார்.
14 சவரன் நகைக் கொள்ளை
இந்நிலையில் அவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரியும் சசிகுமார் என்பவர் தனது வீட்டிற்குச் சென்ற போது பக்கத்து வீட்டில் கதவு தாழ்ப்பாள் உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு துணிகள் சிதறிய நிலையில் இருந்துள்ளது. உடனடியாக சம்பவம் தொடர்பாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாகப் பெண் காவலர் சத்யாவிடம் தொலைபேசியில் கேட்டதற்கு வீட்டில் 14 சவரன் நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சத்தி 30 ஆயிரம் பணம் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.