சென்னை: சேப்பாக்கத்தில் ஆறுமுகம் விசாரணை ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
இந்த விசாரணையானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற கோணத்தில் புகழேந்தி சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த மனுவின் அடிப்படையில் இன்று முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை முடிவு பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், “அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்ட மனுவின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னுடைய வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான மிக முக்கியமான வாக்குமூலம் அளித்துள்ளேன்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பிரிந்து இருந்த நேரம் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆணையத்தினை அமைத்தார்கள். பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமியும் வெவ்வேறு அணிகளாக செயல்பட்டு வந்த போது மீண்டும் ஒன்றிணைவதற்காக இந்த ஆணையம் அமைத்துள்ளனர்.
அதிமுக தலைமை நிலையச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் கைரேகை வைக்கவோ கையெழுத்திடவோ முடியாது. அப்படியானால் அவரை கட்டாயம் இந்த ஆணையம் விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறேன். ஆணையம் என்ன முடிவு செய்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா ? சசிகலாவின் பதில் என்ன?