ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க வேண்டுமென அதிமுக பிரமுகர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் வழி உறவுகளான தீபா, தீபக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராகச் சேர்த்து அவர்களிடமும் விசாரணை நடத்தியது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கும் நிர்வாகிகளாகத் தங்களை நியமிக்கக்கோரி தீபாவும், தீபக்கும் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல்செய்தனர்.
ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான அனைத்து மனுக்களின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு காணொலி காட்சி மூலம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில்,
- ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தாக்கல்செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
- ஜெயலலிதாவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி அவரின் சகோதரரின் மகள் தீபா, மகன் தீபக்கை இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்படுகின்றனர்.
- மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஒதுக்கி, அவர் பெயரில் பொதுச்சேவைக்காக தீபாவும், தீபக்கும் அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும். இது தொடர்பாக எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்.
- ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான போயஸ் தோட்ட இல்லத்தை அரசு கையகப்படுத்தும்போது, அதற்கான இழப்பீட்டை நிர்ணயித்து, அதை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.
- ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கும், தீபக்குக்கும் 24 மணி நேரமும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தி, அதற்கு பெருந்தொகையை இழப்பீடாக வழங்குவதற்குப் பதில், அத்தொகையை குடிநீர் திட்டத்துக்கும், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவதற்கும் பயன்படுத்தலாம்.
- மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதே, கட்சித் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும். மறைந்த முதலமைச்சர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்ற அரசுகள் முடிவெடுத்தால், அது ஒரு தொடர்கதையாகவே இருக்கும். அரசு பணம் தேவையில்லாமல் நினைவு இல்லங்கள் அமைக்கவே செலவிடப்படும்.
- எனவே, போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதற்குப் பதில், ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மீதமுள்ள பகுதிகளை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
- ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒன்றை விற்று, அத்தொகையை வங்கியில் செலுத்தி அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தீபாவும், தீபக்கும் பாதுகாப்புச் செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் வேதா இல்லம்