முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு மேலாக நளினி, ஜெயகுமார், ரவிசந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ஆம் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை காரணங்களை மேற்கோள்காட்டி காட்டி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தங்களையும் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சிறையில் இருந்த ரவிசந்திரனுக்கு காலவரையற்ற பரோல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நளினிக்கும் பரோல் வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும் ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததில் , ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைதொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறையில் இருந்த ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இருவரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.